search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள் கடுங்காவல் தண்டனை"

    நரோடா பாட்டியா வன்முறை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #NarodaCase #NarodaPatiya
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு மறுநாள், அதாவது 2002ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத்தின் நரோடா பாட்டியா என்ற இடத்தில் கடும் வன்முறை வெடித்தது. இதில், சிறுபான்மை இனத்தவர்கள் 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பஜ்ரங் தளம் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 18 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள ராஜ்புத், ராஜ்குமார் சாமால், உமேஷ் பர்வாத் ஆகியோர் சார்பிலும் தண்டனை தொடர்பாக மீண்டும் வாதம் நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களது தரப்பு வாதங்களை முறையாக கேட்கவில்லை என்பதால்,  தண்டனை தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று மூவரும் மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று  நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக அறிவித்தனர். மேலும், இந்த மூன்று பேரும் 6 வாரங்களுக்குள் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இன்று தண்டனை பெற்றுள்ள 3 பேரும், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். அதன்பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் என நிரூபணமானது குறிப்பிடத்தக்கது. #NarodaCase #NarodaPatiya

    ×